இந்தியா செல்லும் கோட்டாபய தலைமையிலான அணி! ஊடகப்பிரிவு வெளியிட்ட தகவல்
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்திற்கு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பயணமாகவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவருடன் ஆளும் தரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உள்ளடங்கலாக 125 பேர்களைக் கொண்ட குழுவினர் பயணமாகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமான நிலையத்தை எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திறந்து வைக்கவுள்ளார்.
சிறிலங்காவுக்கும் - இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற சமய மற்றும் கலாசார இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அங்குரார்ப்பண நிகழ்விற்கு சிறிலங்காவிலிருந்து முதலாவது விமானம் அழைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) இந்த பயணம் தொடர்பில் தற்போது வரை நிகழ்ச்சி நிரல் ஒன்றும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதானி கிங்ஸி ரத்நாயக்க (Kingsy Ratnayake) தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.