வாக்குறுதிகளை முறையாக செயற்படுத்துங்கள்! ராஜபக்ஷ அரசுக்கு எச்சரிக்கை
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாதம் முடக்கப்பட்டுள்ளதா? அல்லது எழுச்சி பெற்றுள்ளதா? என்ற சந்தேகம் காணப்படுகிறது என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது, தற்போதைய அரசாங்கம் மீது அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நாட்டில் அதுவரை காலமும் புரையோடிப் போயிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பகிரங்கப்படுத்தியது.
தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தவே நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மகாசங்கத்தினர் ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவு வழங்குகிறார்கள்.
எமக்கு எந்தக் கட்சி ஆட்சியமைத்தாலும் அவசியமில்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதம், மத்ரஸா கற்கை முறைமை ஆகியவை குறித்து அரசாங்கம் இதுவரையில் உரியநடவடிக்கைகளை எடுக்கவில்லை.
அடிப்படைவாதத்தை தோற்றுவிக்கும் கல்வி முறைமைகள் குறித்து ஏன் இதுவரையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அரச தலைவர்களிடம் கேள்வியெழுப்பியுள்ளோம்.
பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு மொழித் தேர்ச்சி புலமையை கொண்டு நியமனங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை அடிப்படைவாதத்தின் ஒருபகுதியாகவே கருத வேண்டும்.
அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முறையாக செயற்படுத்த வேண்டும் இல்லாவிடின் மக்கள் மீண்டும் ஜனநாயக ரீதியில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்றார்.