கோட்டாபய அளித்த மற்றுமொரு பொதுமன்னிப்பு - தமிழ் அரசியல் கைதிகளின் நிலை?
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் துப்பாக்கியொன்றை தம் வசம் வைத்திருந்தார் எனத் தெரிவித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட வண.உவத்தேன் சுமண தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மன்னிப்பு அளித்துள்ளார்.
தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை அவர் வாபஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
20 வது திருத்தத்தை நிறைவேற்ற அரசாங்கத்தை ஆதரித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர். டயானா கமகே, தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். வண சுமண தேரர் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளராக இருந்தநிலையில் கடந்த ஆண்டு ரி 56 துப்பாக்கியை வைத்திருந்ததற்காக தண்டனை விதிக்கப்பட்டது.
தேரா கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள ஸ்ரீ போதிராஜராம விகாரையின் தலைமை துறவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தமிழ் அரசியல் கைதிகள் எவருக்கும் இதுவரை பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை.
மாறாக அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.