இதுவா அரசாங்கத்தின் திட்டம்? மோசமான நிலைக்கு செல்லும் இலங்கை - த.தே.கூ குற்றச்சாட்டு
வெளிநாடுகளால், இனாமாக வழங்கும் தடுப்பூசியினை மாத்திரம் இந்த அரசு நம்பியிருக்கின்றதே தவிர நிதி ஒதுக்கி அதனை கொள்வனவுசெய்வதற்கு பின்னடிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயாத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பயணத்தடையால் அன்றாட கூலித்தொழிலை நம்பியுள்ள மக்கள் உணவிற்கு கஷ்டப்படும் சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. எனவே அரசு இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கொரோனா விடயத்தில் அரசாங்கம் சரியாக திட்டமிடாமையினால் நாடு மோசமான ஒரு நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது. வடகிழக்கு மக்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை.
அது கவலை தருகின்றது. தற்போது யாழ்மற்றும் வன்னியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்கின்றது. வடக்கிற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக சொல்கிறார்கள். அது போதாதநிலமை உள்ளது. ஒட்டுமொத்த மக்கள்மீதும் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை.
வெளிநாடுகளால் இலவசமாகவோ, இனாமாகவோ வழங்கும் தடுப்பூசியினை மாத்திரமே அரசாங்கம் கொள்வனவுசெய்கிறது. தாங்கள் வாங்கப்போகிறோம் என்று சொல்கிறார்களே தவிர அதற்கான நிதி ஒதுக்கீட்டை இதுவரைக்கும் செய்யவில்லை. சும்மா தந்தால் வாங்கும் நிலமையை அரசு எதிர்பார்த்துநிற்கிறது.
இது நாட்டுமக்களை பாதுகாக்கும் செயற்பாடாக இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஏனெனில் தடுப்பூசிகள் மூலமாக மாத்திரமே வெளிநாடுகள் வைரஸ்பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. இந்தியா இலவசமாக வழங்கிய அல்ராசெனேகா தடுப்பூசியினை திட்டமிடாதவகையில் அனைவருக்கும் செலுத்திமுடித்துள்ளனர்.
தற்போது இரண்டாவது டோசை செலுத்துவதற்கு சினோபார்ம் ஊசியினை பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அல்ராசெனோகா தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஒரு அச்சமான நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டாவது டோசிற்கான ஊசியினை இந்தியா வழங்கும் மட்டும் முதல் டோஸை செலுத்தியவர்கள் அதனை போடாமலா இருப்பது? இதுவா அரசின்திட்டம்? இந்த விடயங்களில் அரசு மெத்தனப்போக்கையே காடைப்பிடிக்கின்றது. இது கண்டிக்கத்தக்க ஒரு விடயம்.
இதேவேளை பள்ளிகள் மூடப்பட்டிருக்கிறது, ஆடைத்தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றது. அங்கு தொற்று ஏற்பட்டால் பல குடும்பங்களை அது பாதிக்கும். நாட்டில் முன்னர் ஆடைத்தொழிற்சாலையாலேயே தொற்று பரவலடைந்தது.
முல்லைத்தீவிலும் அந்த நிலமை இன்று ஏற்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. அது தொடர்பாக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.