மரண பயத்தில் மக்கள் - சமையலறையை கூட பாதுகாக்க முடியாமல் அரசாங்கம் - நாடாளுமன்றில் கிண்டல்
தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் தற்போது எரிவாயு வெடிப்பினால் சமையலறையின் பாதுகாப்பை கூட பாதுகாக்க முடியவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath)தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பின் 9ஆவது நாளான இன்று (02) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் ஆராய குழுக்களை நியமிப்பதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்காமல், தற்போது சந்தையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் எரிவாயு சிலிண்டர்களை சேகரித்து மீண்டும் சேமிப்பிற்கு கொண்டு வந்து அந்த சிலிண்டர்களுக்கு பதிலாக மாற்று எரிவாயுவை வழங்க அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
2 வாரங்களின் பின்னர் உரிய குழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்குள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து அசௌகரியங்களும் தீர்ந்துவிடும் எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உண்மையில் நாட்டிற்கு தேசிய பாதுகாப்பை வழங்கவே நீங்கள் ஆட்சிக்கு வந்தீர்கள். இன்று சமையலறையில் பாதுகாப்பு இல்லை. இன்று சமையலறை பாதுகாப்பை வழங்க முடியாத அரசாங்கம் தேசிய பாதுகாப்பை எவ்வாறு வழங்கும். இன்று ஏழை பணக்காரன் என்று வீட்டில் உள்ள அனைவரும் மரண பயத்தில் உள்ளனர்.
தற்போது இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அறிக்கை வரும் இரண்டு வாரங்களுக்குள், சமையலறையில் இருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும். எனவே, உடனடி தலையீடு தேவை. அரச தலைவர் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.