நெருக்கடியான நேரத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரச அதிகாரிகள் நன்றிக்கு உரியவர்கள் : சாகல ரத்நாயக்க
நெருக்கடியான நேரத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அரச ஊழியர்கள் அனைவரும் நன்றிக்கு உரியவர்கள் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayakke) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிபர் ரணில் விக்ரமசிங்க 2001 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குவது குறித்து ஒரே நிலைப்பாட்டுடன் செயற்பட்டார்.
நிறைவேற்று அதிகாரங்கள்
ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவிக்கான நிறைவேற்று அதிகாரங்களைப் பெற்ற முதல் சந்தர்ப்பத்திலேயே மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமைப் பத்திரங்கள் வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
இது தொடர்பான சட்டங்கள் மற்றும் அமைச்சுப் பத்திரங்களைத் தயாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன எனவே இன்று மக்களுக்கு காணி உரிமை மற்றும் வீட்டு உரிமை வழங்குதல் ஆகிய இரண்டு வேலைத்திட்டங்களையும் வெற்றிகரமாக செயற்படுத்த முடிந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
இதன்போது, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதுடன் அவர்கள் அனைவரும் நன்றிக்கு உரியவர்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக செயற்பட்டார்.
இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |