ஊடக சுதந்திரத்துக்கு அரசால் அச்சுறுத்தல் - வலுக்கும் எதிர்ப்பு
காவல்துறை மா அதிபருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் பலம் மிக்கவை. அவற்றின் மீது கைவைத்து ஊடக சுதந்திரத்தை முடக்க முயற்சித்தால் சிவில் செயற்பாட்டாளர்கள் அனைவரும் வீதிக்கிறங்க நேரிடும் என சிவில் புலனாய்வு முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய மஹாவத்த தெரிவித்தார்.
கொழும்பில் (Colombo) வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஊடகங்களின் உரிமம் இரத்து
காவல்துறை மா அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் தொடர்ச்சியாக பல்வேறு விடயங்களைத் தெரிவித்து வருகின்றோம்.

காவல்துறை மா அதிபருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளரால் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றதா? இது குறித்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியதையடுத்து விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டன.
முந்தைய காவல்துறை மா அதிபரது நடத்தைகளும் இவ்வாறு தான் காணப்பட்டன. அவர் தொடர்பிலும் நாம் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
ஊடக நிறுவனமொன்றை தடை
ஆனால் தற்போதைய காவல்துறை மா அதிபர் அதற்கும் ஒருபடி மேல் சென்று தனியார் ஊடக நிறுவனமொன்றை தடை செய்வது குறித்து பேசுகின்றார்.

ஊழல் மோசடிகளை ஒழிப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கினை வகிக்கின்றன. கடந்த காலங்களில் நாம் இது தொடர்பில் பேசியதால் எம்மை கைது செய்தனர். தற்போதும் என்னை பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த காலங்களைப் போன்று ஊடக சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
காவல்துறை மா அதிபர் மாத்திரமின்றி, ஜனாதிபதி தவறிழைத்தாலும் அதனை சுட்டிக்காட்டுவதற்குள்ள ஒரேயொரு வழி ஊடகம் மாத்திரமே. ஊடகங்கள் பலம் வாய்ந்தவை. எனவே ஊடகங்கள் மீது கை வைத்தால் சிவில் செயற்பாட்டாளர்களான நாம் வீதிக்கிறங்குவோம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |