மகிந்தவின் பிடிவாதத்தால் விஜேராம அரசியலில் வலுக்கும் வாதங்கள்!
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாமதத்திற்கு முதன்மையான காரணம், வீட்டில் உள்ள பொருட்களைப் பெறுவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் நெருக்கடியாக கருதப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் உடைமைகளை அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.
அரசு உடைமை
இருப்பினும், வீட்டில் உள்ள அனைத்து அரசு உடைமைகளையும் அரசாங்கம் பட்டியலிட்டு ஆய்வு செய்த பின்னர், அவரது தனிப்பட்ட உடைமைகள் அகற்றப்படும் என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்த முடிவுக்கான காரணம், முன்னாள் ஜனாதிபதி தனது உடைமைகளை முதலில் அகற்றினால், பின்னர் "அரசாங்கச் சொத்தை அபகரித்ததாகக்" குற்றம் சாட்டப்படும் அபாயம் இருப்பதாக நம்பியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி முதலில் அவரது தனிப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக காணப்படுகிறது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதிக்குச் சொந்தமான பொருட்களுக்கு மேலதிகமாக, விஜேராம மாவத்தையில் உள்ள பங்களாவில் தற்போது பிரதமர் அலுவலகம் மற்றும் பொது நிர்வாக அமைச்சகத்திற்குச் சொந்தமான அரசு சொத்துக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
