யாழ் பல்கலை ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் உள்ள அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒரு நாள் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைந்து அடையாள போராட்டம் ஒன்றை இன்றையதினம் (30) காலை 10.15 அளவில் முன்னெடுத்தனர்.
யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தின் போது பல்வேறு கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீர்வை விரைவுபடுத்தக் கோரிக்கை
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ் பல்கலையின் ஆசிரியர் சங்க தலைவர் விக்னேஸ்வரன், “இன்றைய அரசின் கல்வி அமைச்சர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் எமது பிரச்சினைகள் குறித்து பலசுற்றுப் பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.
தீர்வை வழங்குவதற்கு அவர்கள் இணங்கிய நிலையில், தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் அல்லது இழுத்தடிப்பு நிலை இருந்துவருவதால், அதற்கு எமது எதிர்ப்பை வெளிக்கொணரும் வகையிலும் தீர்வை விரைவுபடுத்தக் கோரியுமே இந்த போராட்டத்தை நாம் முன்னெடுக்கின்றோம்.
இந்த அரசு தற்போது கொண்டுவந்துள்ள சம்பள சீரமைப்பில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருக்கின்றது. அதேபோன்று கொரோனா உள்ளிட்ட பல அனர்த்தங்களால் பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர் அனுமதிப்பும் அதிகரித்துள்ளதால் மாணவர்களை உரிய ஆராய்ச்சி முறையிலான கற்பிதங்களை செய்வதில் பல நெருக்கடிகள் இருக்கின்றன.
வெற்றிடங்களை நிவர்த்தி செய்தல்
மேலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பிள்ளைகளுக்கு தரம் மிக்க பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைப்பதற்கான சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. அதை இந்த அரசு நிறுத்தியுள்ளது.
விரிவுரையாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையால் அவர்களது வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை இன்றைய அரசு எடுக்காதுள்ளதால் விரிவுரையாளர்கள் கடும் சுமைகளுக்குளாகியுள்ளனர்.
அத்துடன் மாணவர்கள் கூடுதலான கற்றலை மேற்கொள்ள குறிப்பாக ஆராய்ச்சிகளை முன்னெடுக்க முடியாதிருக்கின்றது. கல்வி மறுசீரமைப்பை இந்த அரசு முன்னெடுக்கின்றது.
இந்த நடவடிக்கையின் போது உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாது மேற்கொள்ளப்படுகின்றது என எமது தாய்ச்சங்கம் சுட்டிக்காட்டிய போதும் அது தொடர்பில் அரசு அக்கறை கொள்ளாதிருக்கின்றது.
இவ்வாறான பல பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வரும் நிலையில் அரசுடன் பேச்சுக்களை நடத்தி தீர்வை எட்டியிருந்தோம். ஆனால் அந்த தீர்வை நடைமுறைப்படுத்த அரசு பின்னடிக்கின்ற நிலை காணப்படுகின்றது.
வவுனியா பல்கலைக்கழகத்தில் போராட்டம்
இந்தநிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வை விரைவுபடுத்தும் நோக்கிலேயே இந்த ஒரு நாள் அடையாள போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே நாட்டின் முதுகெலும்பான பல்கலைக்கழக கட்டமைப்பை வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம்“ என தெரிவித்தார்.
இதேவேளை பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக தெரிவித்து வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக வாயிலிற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழகளக ஆசிரியர் சம்மேளனத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மூளை இழப்பு, மூலதன இழப்பு, புதிதாய் எதுவும் வேண்டாம் பறித்ததை தா, தேவையான வெற்றிடங்களை நிரப்பு, உயர் கல்வி இன்றேல் உயர்ச்சி இல்லை போன்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
