வடக்கு ஆளுநர் மாற்றம் தொடர்பில் வெளியான தகவல்
வடக்கு மாகாண ஆளுநர் விரைவில் மாற்றப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை தனது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய பின் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாகாணத்திலுள்ள மக்களின் இலக்குகளை அடைவதற்கு மாகாண நிர்வாகம் சிறப்பாக இருப்பது அவசியம் என கருதப்படும் நிலையிலேயே ஆளுநர் மாற்றம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார்.
மாகாண நிர்வாகம்
மேலும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு - கிழக்கில் சரியான நிர்வாகம் இல்லாமல் தமிழ் மக்களின் இலக்கை அடைய முடியாது.

வடக்கு - கிழக்கு அரசியல்வாதிகள் சமஸ்டி வேண்டுமெனவும், சிலர் தனிநாடு வேண்டுமெனவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
எவ்வாறான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்ட போதிலும், மாகாணத்தின் நிர்வாகம் எமது இலக்குகளை அடையக் கூடிய வகையில் வினைத்திறனாகச் செயற்படும் பட்சத்தில் மட்டுமே எமது இலக்குகளை உரியமுறையில் வெற்றி கொள்ள முடியும்.
அதிபரிடம் முறைப்பாடு
அதிகாரிகள், அரசியல்வாதிகளின் சொற்படி நடப்பவர்களாக அல்லாமல், மக்களின் தேவைகளை அறிந்து நேர்மையான வழியில் அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆனால், அதிகாரிகளை அவர்களது பதவியிலிருந்து கீழ் இறக்கும் செயற்பாடுகளை வட மாகாண ஆளுநர் மேற்கொண்டு வருகிறார்.
வட மாகாண ஆளுநர் தொடர்பில் அதிபரிடம் பல்வேறு முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என சுட்டிக்காட்டியுள்ளார்.