யாழ் பல்கலைக்கு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வளாகம்: பிரதமருக்கு கடிதம்
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வளாகத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் பாவனைக்கு ஒதுக்குவதற்கு ஆவன செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரதமரும், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருக்கு நவம்பர் 26 ஆம் திகதி அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
பயிற்சிக் கலாசாலை
அந்தக் கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தற்போது பயிற்சியிலுள்ள ஆசிரிய பயிலுநர்களின் கற்கைக் காலம் முடிவடைந்ததும் அதன் செயற்பாடுகள் நிறைவு செய்யப்படவுள்ளது.
மருதனார்மடத்தில் அமைந்துள்ள சேர் பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடம் தற்போது இரண்டரை ஏக்கர் காணியில் ஆறு துறைகளின் கீழ் ஆயிரத்து 391 மாணவர்களுடன் காணிப் பற்றாக்குறை காரணமாகப் போதிய வகுப்பறைகள், பரீட்சை மண்டபங்கள் மற்றும் விளையாட்டு வசதிகள் இல்லாத நிலையில் சில தேவைகளுக்காகத் தனியார் கட்டடங்களை வாடகைக்கு அமர்த்தவும் வெளிப்புற விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தவும் வேண்டிய நிலையில் உள்ளது.

விரைவில் தனது செயற்பாடுகளை நிறைவு செய்யவுள்ள கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஐந்து ஏக்கர் விஸ்தீரணமுள்ள வளாகத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்குவது குறித்த பீடத்தின் உட்கட்டமைப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குப் பெரிதும் உதவும்” என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை வளாகத்தில் 18 விரிவுரை மண்டபங்கள், கேட்போர் கூடம், நூலகம், விடுதிகள் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற சகல வசதிகளும் உண்டு என்பதுடன் மருதனார்மடம் மற்றும் கோப்பாய் ஆகிய இரு காணிகளும் சேர் பொன்னம்பலம் இராமநாதனால் கல்வி நோக்கங்களுக்காக நன்கொடையாக வழங்கப்பட்டவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர், சேர் பொன்னம்பலம் இராமநாதனின் பெயரில் இயங்கும் பீடத்துக்கு கோப்பாய் வளாகத்தை ஒதுக்குவது வரலாற்று ரீதியாகவும் பொருத்தமானதாக அமையும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |