பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர்: நீதிமன்றின் உத்தரவு
நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் அரச உத்தியோகத்தருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்
குறித்த பெண் அரச உத்தியோகத்தர் நிந்தவூர் காவல்துறையினரால் கடந்த செவ்வாய்க்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட வேளையில் ஏற்பட்ட அதிர்ச்சியால் அவர் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்புடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற சம்மாந்துறை நீதிவான், நிலைமைகளை நேரில் அவதானித்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நீதிவான் பணித்துள்ளார்.
மேலதிக விசாரணை
நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது அலுவலகக் கடமையின் போது குறித்த பெண் உத்தியோகத்தர் காணொளி (Video) எடுத்து அச்சுறுத்தல் விடுத்ததுடன், அக்காணொளியை சமூக வலைத்தளமான முகநூலிலும் பதிவேற்றம் செய்திருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பிரதேச செயலக நிர்வாகத்தினரால் நிந்தவூர் காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அம்முறைப்பாட்டிற்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் குறித்த பெண் உத்தியோகத்தர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்ட போதே திடீரென மயக்கமுற்று விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்குப் பெண் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதுடன் நிந்தவூர் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4