சொத்துக்களை சமர்ப்பிக்காத முக்கியஸ்தர்களின் பட்டியலில் முன்னாள் தமிழ் அமைச்சர்
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பட்டியலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption) அதன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த அரச அதிகாரிகளில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள், 29 முன்னாள் தூதுவர்கள் மற்றும் இரண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியான பட்டியல்
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத முன்னாள் அமைச்சர், முன்னாள் மீன்பிடித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) என குறிப்பிடப்படுகின்றது.
முன்னாள் ஆளுநர்களான மார்ஷல் ஆஃப் தி ஏர்ஃபோர்ஸ் ரோஷன் குணதிலக, செந்தில் தொண்டமான், நவீன் திசாநாயக்க மற்றும் வில்லியம் கமகே ஆகியோர் குறித்த திகதிக்குள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே, தாரக பாலசூரிய, சாந்த பண்டார, காதர் மஸ்தான், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காதவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
