இராணுவத்தை சிறையில் அடைத்தே ஜி எஸ் பி பிளஸ் சலுகையை பெற்றது நல்லாட்சி - அரசாங்கம் தெரிவிப்பு
ஸ்ரீலங்கா இராணுவத்தை சிறையில் அடைத்து, சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்ததன் மூலமே கடந்த காலத்தில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஸ்ரீலங்காவால் பெற்றுக்கொள்ள முடிந்ததாக, இராஜாங்க நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 30இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு உடன்படுவதாக அப்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்ததாகவும், இது பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் அல்லவெனவும் மாறாக இது அரசியல் சார்ந்த விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி ஊடான கலந்துரையாடலில் பங்கேற்ற அஜித் நிவாட் கப்பராலிடம், ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும்போது அதற்காகப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அவை பொருளாதாரம் சார்ந்த நிபந்தனைகள் அல்ல. மாறாக நாடொன்றின் கொள்கைகள், மனித உரிமைகள் உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் சார்ந்த நிபந்தனைகளாகவே இருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கடந்த 2002ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது, போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் எமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டு 2010ஆம் ஆண்டில் இல்லாமல் செய்யப்பட்டது. அப்போதும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையப்போகின்றது என்பது உள்ளடங்கலாக இப்போது முன்வைக்கப்படும் அனைத்துக் கூச்சல்களும் எழுந்தன.
ஆனால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த ஏற்றுமதிகளை விடவும் 2010 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் ஏற்றுமதிகளின் அளவு 20 சதவீதத்தினால் அதிகரித்தது. இவர்கள் கூறுவதைப்போன்று பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை.
பின்னர் மீண்டும் கடந்த 2017ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 30இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு உடன்படுவதாகக் கூறினார்கள்.
எமது இராணுவ வீரர்களை சிறைகளில் அடைத்தார்கள். சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்தார்கள். அதன்மூலமே அந்த வரிச்சலுகை மீண்டும் பெறப்பட்டது. இவையனைத்தும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் அல்ல. மாறாக அரசியல் நடவடிக்கைகள் என்பது அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே எமது கொள்கைகள் மற்றும் நாட்டின் இறையாண்மை தொடர்பில் நாம் அவர்களுக்கு விளக்கமளிக்க முடியும். இல்லாவிட்டால், ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராயவேண்டும்.
அடுத்தவாரமளவில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, உரிய செயற்திட்டங்கள் வகுக்கப்படும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், எமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளை பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதற்கான கொள்கைகளும் திட்டங்களும் தயாரிக்கப்படும்”