இஸ்ரேல் செல்லவிருக்கும் பிரித்தானிய பிரதமர்: போர் நெருக்கடியை குறைக்க ஆலோசனை
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுடன் மேற்கொள்ளப்படும் சந்திப்பில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடியை குறைக்க ஆலோசனைகள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், காசா பகுதிக்கான போக்குவரத்தை உருவாக்க அழுத்தம் அளிக்கவும், அதனூடாக மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கவும் வாய்ப்பாக அமையும் என ரிஷி சுனக் நம்புவதாக கூறியுள்ளார்.
ஒன்றிணைந்து செயல்படவும்
அத்தோடு, இந்த சந்திப்பை காசா பகுதிக்குள் சிக்கியுள்ளவர்களையும் மீட்கும் வாய்ப்பாக பயன்படுத்த ரிஷி சுனக் முடிவு செய்துள்ளார்.

அதேவேளை, விவகாரம் தொடர்பில் பிராந்தியத்தில் உள்ள பல தலைவர்களை சந்திக்கவும் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு அப்பாவியின் உயிரும் மதிப்புமிக்கது என குறிப்பிட்டுள்ள ரிஷி சுனக், ஹமாஸின் கொடூரமான தாக்குதல்களை தொடர்ந்து பல உயிர்கள் பலியாகியுள்ளன என்றார்.
மனிதாபிமான உதவிகள்
அதேவேளை, பிராந்தியத்தில் உள்ள செல்வாக்குமிக்க நாடுகளின் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும்,காசாவுக்குள் மனிதாபிமான நடவடிக்கைகளை எளிதாக்கவும் பணயக்கைதிகளை விடுவிக்க ஒன்றிணைந்து செயல்படவும் இந்த சந்திப்புகள் உதவும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிக்கையில், ரஃபா எல்லைக் கடவைத் திறக்க எகிப்திய தலைவர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசி ஒப்புக்கொண்டதாகவும், இதனால் 20 லொறிகள் மனிதாபிமான உதவிகள் காசா பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.