யாழ்ப்பாணத்தை தமிழ் நாட்டிடம் கொடுக்க சொன்ன அர்ச்சுனா! வழங்கியுள்ள புதிய விளக்கம்
கடந்த செவ்வாய்க்கிழமை(5) நாடாளுமன்றத்தில் தான் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
கச்சத்தீவுடன் யாழ்ப்பாணத்தையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என தான் கூறியதாக வெளியான செய்திகள், தனது தமிழ் உரையை ஊடகங்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால் ஏற்பட்ட தவறான புரிதல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் கையெழுத்தானதாகக் கூறப்படும் ஏழு ஒப்பந்தங்களை விமர்சிக்கும் நோக்கில், கிண்டலாகவே அக்கருத்துக்களைத் தான் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் ஒப்பந்தங்கள்
தான் நாட்டை நேசிப்பவன் என்றும், நாட்டைப் பிரிக்கக் கோரவில்லை என்றும் வலியுறுத்திய அவர், "நான் என் நாட்டை விற்க மாட்டேன், இலங்கை என் நாடு" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அரசாங்கம் இந்தியாவிற்கு அனைத்தையும் தாரை வார்த்துக்கொடுத்தால், அந்த ஒப்பந்தங்களை ஆதரிப்பவர்களே மோடியிடம் செல்ல வேண்டும் என்ற அர்த்தத்திலேயே தான் அவ்வாறு பேசியதாக அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |