வடக்கு மக்களுக்கு அநுர தரப்பு அளித்த உறுதி
வடக்கு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நிச்சயமாக பாதுகாப்போம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உறுதியளித்துள்ளார்.
காரைநகரில் நேற்று (11) நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பிரதமர் மேலும் உரையாற்றியதாவது, “இந்த மண்ணில் பல திறமையானவர்களும் பண்டிதர்களும், கல்விமான்களும் தோற்றம் பெற்றார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர்.
புலம்பெயர்ந்தவர்கள்
இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என நாம் நம்புகிறோம். ஆதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம்.
சரியான வசதிகளும் அபிவிருத்திகளையும் ஏற்படுத்திக்கொடுப்பதன் ஊடாக இப்பிரதேசத்தை மேம்படுத்த முடியும். ஆகவே உரிமம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை நாம் வழங்குவோம்.
தென்பகுதியில் உள்ள மக்கள் இப்பகுதி மக்களை நேசிக்கிறார்கள். ஆனால் இந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முகங்கொடுக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் உள்ளன.
கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய பல துறைகளில் பற்றாக்குறை உள்ளதை நான் அறிவேன். யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றும் தொடர்கிறது. இதற்கு நாங்கள் அரச நிர்வாக கட்டமைப்பின் ஊடாக தீர்வைப்பெற்றுக்கொடுப்போம்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல்
2024 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுத்தனர். ஊழல் அற்ற அரசாங்கத்தை தெரிவு செய்தார்கள். அதைப்போன்று நாடாளுமன்ற அதிகாரத்தை முழுமையாக எமக்களித்தார்கள்.
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் நாட்டு மக்கள் இன, மத விடயங்களுக்கு அப்பாற்பட்டு திறமையான மற்றும் ஊழலற்றவர்களை தெரிவு செய்ய வேண்டும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு நாம் முன்னுரிமையளித்துள்ளோம். ஸ்திரமான நிலையில் இருந்து கொண்டு தான் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்.
அரச சேவையானது நாட்டு மக்களுக்கு வினைத்திறனதாக அமைய வேண்டும். அதற்கு சாதகமாக சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம்.
மக்களின் ஜனநாயக உரிமை
அரசியல் தலையீடுகள் இல்லாமல் அரசசேவை தற்போது சுயாதீனமாக இடம்பெறுகிறது. மாகாணசபைத்தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு தேவையான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு என்றும் முன்னுரிமையளிப்போம்.
இந்த மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அதனை ஆற்றுப்படுவதற்கான பொறுப்பு எமக்குண்டு. அதற்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் வெளிப்படையான தன்மையுடன் மேற்கொள்வோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
