நெடுந்தீவில் இடம்பெற்ற ஊரும் உறவும் நல்வாழ்வு நம் கையில்: விவசாய செயற்றிட்டத்தின் அறுவடை விழா (படங்கள்)
நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்த இதுவே சிறந்த வழி என நெடுந்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்ததுடன், விவசாயிகளின் ஆக்க ஊக்கமான செயற்பாடுகளையும் பாராட்டியிருந்தார்.
நெடுந்தீவில் இன்று (23) இடம்பெற்ற ஊரும் உறவும் நல்வாழ்வு நம் கையில் விவசாய செயற்றிட்டத்தின் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நெடுந்தீவு மேற்கு கோட்டைக்காடு பகுதியில் ஊரும் உறவும் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் மு. அமிர்தமந்திரன் தலைமையில் விவசாய இணைப்பாளர் தமிழ்மாறன் ஒழுங்கமைப்பில் 2023 ஆம் ஆண்டுக்கான அறுவடை விழா இன்று (23) காலை 10.30 ஆரம்பமாகியது.
மக்களின் தேவைக்கு
இந்நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக நெடுந்தீவின் காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் விவசாயப் போதனாசிரியர் திரு. கோகுலறாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் நிறுவனத்தின் தலைவர், உபசெயலாளர், நிதிநிர்வாக உத்தியோகத்தர், முதன்மை விவசாயிகள், விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பண்ணை விவசாயிகள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை நிகழ்வின் தலைவர் உரையாற்றும் போது அனைவரையும் வரவேற்றுக் கொண்டதுடன் தமது பண்ணையில் உயர் நில விவசாயம் தமது மக்களின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தீவிற்கு அப்பால் சந்தைப்படுத்தல்
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்
“எமது உற்பத்திகளை மக்களிற்கு வழங்கி பின்னர் மிகுதியை எமது தீவிற்கு அப்பால் உள்ள வெளி இடங்களிற்கு எதிர்காலத்தில் சந்தைப்படுத்த உள்ளோம்.
எமது தீவில் உள்ள மூலிகை இலைவகைகளான குறிஞ்சா, தூதுவளை, பிரண்டை, வீனாலை, முசுட்டை, தாளி ஆகியவற்றுடன் ஆவாரம்பூ, நன்நாரி, மூக்கறட்டை, தேங்காய்ப்பூக்கீரை, குப்பைமேனி, மணத்தக்காளி, கீழ்க்காய் நெல்லி போன்ற மூலிகைகளை மூலிகை தயாரிப்பாளர்களிற்கு சந்தைபடுத்த திட்டமிட்டுள்ளோம். மூலிகைகள் தேவையானவர்கள் இருந்தால் அதனை கோரும் வேளையில் எம்மால் வழங்க முடியும்.
0777395242 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அதனை வழங்க மூடியும், அதற்கான சரியான விலை மக்களை சென்றடைய வேண்டும்.”
சிறந்த அறுவடை
மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட விவசாய போதனாசிரியர் இந்த நிலப்பரப்பில் சிறந்த அறுவடையினை பெற தொழிநுட்பங்களை எடுத்துக் கூறியது மட்டுமல்லாது விவசாயிகளின் நுட்பமான செயற்பாட்டிற்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அத்துடன் நுட்பமான செயற்பாடுகளை உள்வாங்கி செயற்பட்டுள்ளமை கண்கூடாக பார்த்தமை தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இனிவரும் காலங்களில் இதனை அதிகரிக்க வேண்டும் எனவும் தனக்கு மகிழ்ச்சிதரும் நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்தமை மிகவும் சந்தோசத்தை தருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் நெடுந்தீவு நோக்கிய பார்வையில் இவ் விவசாய வேலைத்திட்டம் சிறந்து விளங்கும் என்ற நம்பிக்கையினையும் வெளியிட்டார்.
மேலும் விவசாய சங்கத்தின் தலைவர்கள் குறிப்பிடுகையில் இது எமது தொடக்கம் இன்னும் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
பாரம்பரிய உணவுகள்
அத்துடன் இந்நிகழ்வின் போது கலந்து கொண்ட ஊரும் உறவின் விவசாய காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியான விவசாய நடவடிக்கைக்கு காணிகளை வழங்க முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நீர்ப்பாசன வழிகளிற்கு தொழில்நுட்ப ஆலோசனைகள், மற்றும் மிளகாய் நாற்று மேடையினை நெடுந்தீவின் ஊரும் உறவு நிறுவனத்திற்கு வழங்கி வைக்க திரு. தியாகு அவர்கள் முன்வந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது பனங்கிழங்கு, பனம் விதையில் இருந்து பெறப்பட்ட பூரான், புளுக்கொடியல் மா உருண்டை, காளான் கோப்பி ஆகிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |