சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - அரசியல்வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது; கொந்தழிக்கும் மக்கள்!
ஹட்டனில் வீதி புனரமைக்கக் கோரி மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டம் இன்று காலை அப்பிரதேச அரசியல்வாதிகளுக்கு எதிராக இடம்பெற்றுள்ளது.
இதன் போது, விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம் என ஹட்டன், வெலிஓயா - 22 ஆம் தோட்ட பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தோட்ட மக்கள் எச்சரிக்கை

இந்த போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஹட்டன், வெலிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (02.01.2023) உயிரிழந்துள்ளார். சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை.
வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையிலேயே இதற்கு மேலும் மக்கள் சாவதற்கு இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரை கையில் பிடித்து பயணிக்கும் மாணவர்கள்

சிறார்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிக்கின்றனர்.
இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம்.
அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை

இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம் எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளனர்.







 
                                        
                                                                                                                         
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        