கெஹலிய ரம்புக்வெல போலி மருந்துகள் இறக்குமதி செய்கிறார்: செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல போலியான மருந்துகள் இறக்குமதி செய்து அந்த பணத்தை தனது பொக்கட்டுக்களை நிறப்பி உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(10.09.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இது தொடர்பாக கூறுகையில், எமது நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
முறைப்பாடுகள்
இதனால் எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். வடமாகாணத்தை பொறுத்தவரையில் தலைமை தாங்குகின்ற வைத்தியர்கள் தமது பிரச்சினைகளை வெளியே கூறி உள்ளனர்.

அவர்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டாலும் கூட நிலவுகின்ற வைத்திய பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்தும் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்ற மாத்திரைகள் போலியானதாக உள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல போலியான மருந்துகள் இறக்குமதி செய்து அந்த பணத்தை தனது பொக்கட்டுக்களை நிறப்பி உள்ளார்.
அதனடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டையும் சுகாதார அமைச்சர் ஏமாற்றியது மட்டுமின்றி இதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களும் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் ஏமாற்றி உள்ளார்.
துரித நடவடிக்கைகள்
இந்த பிரச்சினையில் இருந்து மீண்டு எழ வேண்டுமாக இருந்தால் சுகாதார அமைச்சர் மாற்றப்பட வேண்டும். அவர் வெற்றி பெற்று விட்டார் என்ற எண்ணத்துடன் இருக்க முடியாது. அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக அவரை வெற்றி பெற செய்துள்ளனர்.

அவை மாற்றப்பட வேண்டும் அல்லது அவர் பதவி விலக வேண்டும், இது மக்களினுடைய வாழ்வு மற்றும் உயிர் பிரச்சினையாக அமைந்துள்ளது, இதில் விளையாட முடியாது.
எனவே அதிபர் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி இவ்வாறானவர்களை வெளியேற்றி சுகாதார துறைக்கு நல்ல இளமையானவ அமைச்சராக நியமித்து ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.