யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாயம்...! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
யாழ்ப்பாணம் (Jaffna) உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்த எச்சரிக்கையை நேற்றிரவு (07.01.2026) 11 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது.
இதற்கமைய அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவு மழைவீழ்ச்சி
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலுக்கமைய ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் ஆறுகள் அமைந்துள்ள இடங்களில் அதிகளவு மழைவீழ்ச்சி கிடைக்கப்பதற்கு இடமுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாவட்டங்களில் தாழ் நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் அனர்த்த நிலை ஏற்படுமாயின் 117 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
மேலும் பொத்துவிலுக்கு தென் கிழக்காக சுமார் 580 கிலோமீட்டரில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் இன்று கிழக்கு மாகாணத்தின் கரையோரத்தை நெருங்க உள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |