இலங்கையர்களுக்கு இந்தியாவில் உயரிய விருது
இலங்கையை சேர்ந்த இருவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய குடியியல் கௌரவங்களில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மஸ்ரீ விருதுகளை வழங்கும் வைபவம் 2021 நவம்பர் 8ஆம் திகதி புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றிருந்த நிலையில், இந்நிகழ்வில் இந்திய ஜனாதிபதி 2020ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
கொவிட்-19 காரணமாக இந்நிகழ்வுகளை முன்கூட்டியே நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டில் இலங்கையை சேர்ந்த இருவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருந்தமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டியதாகும்.
கலைத்துறை சார்ந்த சாதனைகளுக்காக வஜிர சித்ரசேனாவுக்கும் இலக்கியம் மற்றும் கல்வித் துறைக்கு வழங்கிய பங்களிப்புக்காக பேராசிரியர் (மறைந்த) இந்திரா தசநாயகே அவர்களுக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் வழங்கப்படும் உயரிய குடியியல் கௌரவங்களில் ஒன்றான பத்ம விருதுகள் ஒவ்வொரு வருடமும் இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
பல்வேறு துறைகளிலும் தளங்களிலும் நிகழ்த்திய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்திய துணை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் ஆகியோரது பிரசன்னத்துக்கு மத்தியில் இந்திய ஜனாதிபதி அவர்களிடமிருந்து விருதினை பெற்றுக்கொள்வதற்காக மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயகே அவர்களின் புதல்வி வத்சலா தசநாயகே இஸ்தவீர அவுஸ்திரேலியாவிலிருந்து இந்தியாவிற்கு வருகை தந்திருந்த அதேவேளை, வஜிர சித்ரசேனா அவர்களுக்கான விருது எதிர்வரும் நாட்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.