இலங்கையில் அதிகரிக்கும் வீதி விபத்துக்கள் : பாதிப்புக்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள அரசாங்கம்
இலங்கையில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடல் விடுதியில் நடைபெற்ற “பாதுகாப்பான வீதி - பாதுகாப்பான குழந்தைகள்” சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போதே அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் அதிபர் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மருத்துவச் சங்கத்தின் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நிபுணத்துவ குழுவினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வீதி விபத்துக்கள்
வீதி விபத்துக்களால் தவிர்க்க முடியாத வகையில் நேரும் சிறுவர் மரணம், வாழ்நாள் முழுவதுமான அங்கவீனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், அதற்காக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளின் பணிகள் தொடர்பிலும் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிகழ்விற்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளையில், வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்கான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசித்ததாக சாகல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வீதி விபத்துக்களை தவிர்த்தல்
இதேவேளை, வீதி விபத்துக்களை தடுக்கும் நடைமுறையில் வாகனங்களின் தரம் மற்றும் வீதிகளின் தன்மை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் வீதிக் கட்டமைப்புக்கள் பெருமளவில் மேம்படுத்தப்படவில்லை எனவும் தெற்கு அதிவேக வீதியில் மழைக்காலத்தில் நீர் நிரம்புவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், விபத்துக்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தும் போது, அதில் பிரச்சனைகள் எழுவதாகவும் போதியளவு பணிக்குழாம் வசதிகள் இல்லாமை மற்றும் தொழில்நுட்பங்கள் இல்லாமை குறித்து விரைவில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அதிக வாகனங்கள்
வீதிகளில் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை பேண வேண்டுமெனில் குறிப்பிட்ட தொகை வாகனத்தை நாட்டிலிருந்து அகற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு வழமையான டீசல், பெற்றோல் வாகனங்களுக்கு மாறாக இலத்திரனியல் வாகனங்களின் பயன்பாடு குறித்தும் சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபரின் நடவடிக்கைகள்
இந்த நிலையில், வீதி விபத்துக்கள், அதனை அண்டிய மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதலை மட்டுப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக பேச்சுவார்த்தைக்காக இலங்கை மருத்துவச் சங்கத்தின், வீதி விபத்துக்களை தடுப்பதற்கான குழு மற்றும் அதிபருக்கு இடையிலான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.