நகர மறுக்கும் சீனக் கப்பல்! இலங்கை கடற்பரப்பில் நிலைகொண்டுள்ளதாக தகவல்
பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியமை இரு தடவைகள் உறுதி செய்யப்பட்ட சீனாவின் சேதன உரத்தை ஏற்றிய ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் இன்னமும் இலங்கை கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கப்பல் பயணத் தரவுகளுக்கு அமைய இந்தக் கப்பல் பேருவளையிலிருந்து சுமார் 12.4 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி சீனாவின் சிந்தாவோ துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.
எனினும் இடைநடுவே தமது போக்குவரத்து மார்க்கத்தை மாற்றிய கப்பல், சிங்கப்பூருக்கு சென்றதுடன் சர்வதேச கப்பல் போக்குவரத்து தரவுகளுக்கு அமைய இறுதியாக ஒப்டோபர் 13ஆம் திகதி கப்பல் மலாக்கா நீரிணையில் காணப்பட்டது. அதன் பின்னர் ஹிப்போ ஸ்பிரிட்ஸ் கப்பல் தொடர்பிலான தகவல் பதிவாகவில்லை.
பின்னர் திடீரென யால சரணாலயத்தை அண்மித்த ஹம்பந்தோட்டை கடற்பரப்பில் ஒக்டோபர் 24ஆம் திகதி இந்தக் கப்பலின் பெயர் செய்யோ எக்ஸ்ப்லோரர் என மாற்றப்பட்ட நிலையில் காணப்பட்டது.
ஹம்பாந்தோட்டை ஆழ்கடல் பகுதியை நோக்கி இந்தக் கப்பல் பயணிப்பதை அவதானிக்க முடிந்ததுடன் பின்னர் கப்பல் தொடர்பிலான தொடர்பு மீண்டும் அற்றுப்போனது.
இதேவேளை, ஒக்டோபர் 31ஆம் திகதி கப்பலின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டிருந்ததுடன் ஹம்பாந்தோட்டையில் 24 ஆம் திகதி காணப்பட்ட கப்பலின் பெயர் ஹிப்போ ஸ்பிரிட் என அந்த தகவல்கள் புதுப்பிக்கப்பட்டிருந்தன.
பின்னர் கொழும்பு துறைமுகத்தில் உணவு வகைகளை பெற்றுக்கொண்ட இந்தக் கப்பல் தொடர்ந்தும் களுத்துறை கடற்பரப்பில் காணப்படுகிறது.
சீன உரத்தில் பாதகமான பக்டீரியா உள்ளதாக இலங்கை தேசிய தாவர தடுப்புக் காப்புச் சேவை முதற்தடவையாக செப்டம்பர் 09ஆம் திகதி அறிவித்தது.
இதேவேளை, செப்டம்பர் 12 ஆம் திகதி சீன நிறுவனம் இலங்கை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
இலங்கை கோரும் தரத்திற்கு எவராலும் சேதனப் பசளையை வழங்க முடியாது எனவும் தேவையெனில் சில பக்டீரியாக்களின் அளவை மாத்திரம் குறைக்க முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற நிலையில், கப்பல் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.