அமெரிக்க டொலரை பெற்றுக் கொள்ள இதுவே வழி - எதிரணி எம்.பி ஆலோசனை
இலங்கையில் மனித உரிமையை பாதுகாத்து, மதிப்பளிக்கப்படும் என்ற வாக்குறுதியினை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ராஜபக்ஷ அரசாங்கம் வழங்குமாயின் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுக் கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (S.M.Marikkar) சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர், இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
'''ஜனநாயக விழுமியங்கள் , மனித உரிமை விடயங்கள், ஊடக சுதந்திரம் என்பனவற்றிற்கு மதிப்பளித்து, அவற்றைப் பாதுகாப்பதாக ராஜபக்ஷ அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வாக்கு வழங்குமாயின் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
இல்லை என்றால் எதிர்வரும் மாதங்களில் நாட்டில் அத்தியவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டு, கறுப்புச் சந்தை உருவாகும்.
இதனைச் செய்வதற்கு அரசாங்கத்தினால் முடியாது. எங்களுக்கு இந்த அரசாங்கத்தை தோற்கடிப்பது நோக்கமல்ல. மாறாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும். மக்களுக்கு பாரமற்ற வாழ்க்கை வழங்கப்பட வேண்டும்.
அடுத்த வருடம் இந்த அரசாங்கத்தை நாங்கள் வீட்டுக்கு அனுப்புவோம் என்பதை நிச்சயமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். நாம் அரசாங்கத்திற்கு வந்த பின்னர், மக்களுக்கான நிவாரண பொதி வழங்கப்படும். எரிபொருள் விலை குறைக்க வேண்டும். எரிவாயு விலை குறைக்கப்பட வேண்டும். உணவுப் பொருட்களின் விலைகள் ஆகாயத்தைத் தொடும் வகையில் உயர்வடைந்துள்ளது. வருமான அதிகரிப்பு இல்லாத நிலையில் செலவு அதிகரித்துள்ளது.
இன்று நாட்டில் நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் செலவு பத்தாயிரம் ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதனை கையாள்வதற்கு உலக நாடுகளுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்” என்றார்.