நாட்டிற்கு வரவுள்ள பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள்: இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை
நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நிலையில், வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு அதிகரித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ (Arundika Fernando) தெரிவித்துள்ளார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள பல நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்களைக் கண்டறிந்து அவற்றை ஒழுங்கான முறையில் பராமரிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
அதிபர் ரணில் ஆலோசனை
இதன்படி, ஹில்டன் ஹோட்டல் போன்ற நிறுவனங்களுக்கு அந்த முதலீடுகளை வெளிப்படைத்தன்மையுடன் பெற்று, அதன் மூலம் அரசாங்க திறைசேரியைப் பலப்படுத்தவும், ஊழியர்களுக்கு பங்குகளை வழங்கவும், நிறுவனத்தை ஒழுங்கான முறையில் பராமரிக்கவும் எதிர்பார்க்கப்படுவதுடன் இந்த முதலீடுகளுக்கு அரசின் மதிப்பீட்டை விட அதிக பெறுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரச நிறுவனங்களுக்கு மதிப்பீட்டுப் பெறுமதிக்கு கீழ் தனியார் முதலீடுகளை வழங்க வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி, எந்தவொரு தனியார் முதலீட்டாளரும் அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதியை விட குறைவான விலையில் அரச நிறுவனத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை.
மேலும், சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பாரியளவு கடனைக் கொண்டுள்ளது. அதில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும், விமான நிறுவனத்திற்கு வரும் முதலீட்டாளர் மீதி கடனைத் தாங்கும் அளவுக்கு வலிமையுடன் இருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி கொழும்பு ஹயட் ஹோட்டல், கிறிஷ் மற்றும் டெஸ்டினி திட்டங்களுக்கு பெறுமதியான அரச காணிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, அந்த முதலீட்டாளர்கள் அந்த திட்டங்களை கைவிட்டுவிட்டனர். கிறிஷ் திட்டத்தில் பாழடைந்த கட்டிடத்துடன் சுற்றுச்சூழல் பிரச்சினை மாத்திரமே எஞ்சியுள்ளது.
முப்படைகளின் பங்களிப்பு
அத்துடன் கொழும்பு ஹயட் ஹோட்டல் திட்டத்திற்கு 60 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அது இந்நாட்டு மக்களின் பணம் என்பதைக் கூற வேண்டும். இந்த ஹயட் ஹோட்டல் திட்டத்துடன் தொடர்புடைய மேலும் 35 மில்லியன் டொலர்கள் கடனை செலுத்த வேண்டியுள்ளது. கொழும்பு நகரில் உள்ள மிகவும் பெறுமதியான காணி இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தொடர பொருத்தமான முதலீட்டாளர் கிடைக்காவிட்டால், அரச திறைசேரியில் இருந்து செலவழித்து முப்படைகளின் பங்களிப்புடன் நிர்மாணப் பணிகளை முடிக்க எண்ணியுள்ளோம்.
மேலும் அடுத்த சில மாதங்களில் பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள் இந்நாட்டிற்கு வரும் என நம்புகிறோம். கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டுள்ள நிலையில், இந்நாட்டில் வெளிநாட்டுக் கையிருப்பின் அளவு அதிகரித்துள்ளது. அத்துடன், நிறுத்தப்பட்டிருந்த பிரதேச அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்கவும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டம்
அதிபர் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் ஊடாக ஏற்பட்ட பொருளாதார வலுவூட்டல் காரணமாக அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்திற்கு சமுர்த்தியை விட மூன்று மடங்கு தொகையை ஒதுக்கீடு செய்ய முடிந்துள்ளது.

அத்துடன் உரிமம் பெற்ற காணிகளுக்கு முழுமையான காணி உறுதிகளை வழங்கும் உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற பல பணிகள் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பின்னணியில், வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவராக தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென நாம் நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..... |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்