இலங்கைக்கு துன்பம் நேருமாயின் இந்தியா களத்தில் இறங்கும்!
இலங்கைக்கு துன்பம் நேருமாயின் இந்தியா களத்தில் இறங்கும் என்ற நம்பிக்கையை மீண்டுமொரு முறை ஏற்படுத்தி உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (01.12.2025) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சூறாவளி நாட்டை விட்டு நீங்கும் முன்னரே மீட்பு அணியினரை களத்தில் இறக்கிய இந்தியாவின் செயற்பாடு இதனை எடுத்துரைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார இழப்பு
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “வரலாறு காணாத பேரனர்த்தம் ஒன்று இந்த நாட்டையே உலுக்கியுள்ளது. இலங்கையின் வரலாற்றிலே சுனாமிக்கு அடுத்தப்படியாக அதிகளவான உயிரிழப்புக்களையும், சுனாமியை விட அதிளவான பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ள பேரவலமாக இந்த இயற்கை அனர்த்தம் அமைந்துள்ளது.

சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையிலே மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் எமது பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு எங்களுடைய பிரதேச அமைப்பாளர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் குழு உறுப்பினர்களுக்கு எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா மூலம் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலுக்கு அமைய எமது பிரதேசங்களில் எங்களுடைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலிலே பல்வேறு நாடுகளும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றன.
குறிப்பாக, எமது நாட்டுக்குள் ஊடுருவிய சூறாவளி எமது எல்லைகளை கடப்பதற்கு முன்னதாகவே, மீட்பு நடவடிக்கைகளுக்காக நேரடியாக இந்தியா களமிறங்கியிருந்தது.
எமக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உணர்வு ரீதியான இந்தப் பிணைப்பு தொடர வேண்டும் என்ற எங்களின் விருப்பத்தினை பதிவு செய்வதுடன் இந்திய அரசிற்கும் இந்திய மக்களுக்கும் அதேபோன்று உதவிகளை வழங்க முன்வந்திருக்கின்ற ஏனைய நாடுகளுக்கும் எமது மக்கள் சார்பாகவும், எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |