இந்தியாவிலிருந்து சட்டவிரோத இறக்குமதி: மில்லியன் கணக்கில் இழக்கவிருந்த இலங்கை அரசு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களின் சோதனையின் போது சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட குரக்கன் கையிருப்பை இலங்கை சுங்கத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கொள்கலன் உரிமையாளர் சுங்கத்தில் சமர்ப்பித்த சுங்கப் பிரகடனத்தின் பிரகாரம், அதில் இருந்தவை 25,000 கிலோ கொண்டைக்கடலை என கூறப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் மேற்கொண்ட சோதனைகளின் போது அதில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட குரக்கன் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலையில், இந்த குரக்கன் இருப்பு தலா 30 கிலோ கொண்ட 800 சாக்குகளில் மொத்தம் 24,000 கிலோகிராம்கள் காணப்பட்டுள்ளது.
மேலும், குரக்கன் பங்குகளின் சந்தைப் பெறுமதி 19.2 மில்லியன் ரூபா ஆவதுடன் அதன் வரி வருமானம் தோராயமாக 1.5 மில்லியன் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச் சட்டத்தின்படி, மேலதிக விசாரணைக்குப் பிறகு இந்த மொத்தப் பொருள்களும் பறிமுதல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
