வரி செலுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துவது குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (Inland Revenue Department) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த வரி செலுத்துதல்களை செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பிற நிறுவனங்களுக்கு பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணையவழி வரி செலுத்தும் வசதி
வரி செலுத்துவோர், செலுத்த வேண்டிய வரித் தொகையை இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையிலும் அல்லது இணையவழி வரி செலுத்தும் வசதி (OTPP) மூலமும் செலுத்தலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொடுப்பனவுக்கான இறுதித் திகதியான செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு பின்னர் செலுத்தப்படும் தொகைகள், வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு உத்தரவு மூலம் தீர்க்கப்பட்டாலும், தாமதமான செலுத்துதல்களாகக் கருதப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரியைச் செலுத்தாமல் விடுதல் அல்லது தாமதமாகச் செலுத்துதல் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் தண்டப்பணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
