நாட்டு மக்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
இலங்கையில் வருமான வரிக்காகப் பதிவுசெய்த நபர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, 2025, 2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காலக்கெடுவிற்கு முன்னர் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதன் மூலம் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இணையத்தளம்
2025, 2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான தமது வருமான வரி அறிக்கைகளை இணையவழி முறையினூடாகவும் சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்படின் 1944 என்ற உடனடி அழைப்பு இலக்கத்தின் ஊடாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான WWW.IRD.GOV.LK ஊடாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |