சடுதியாக அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை- கவலைகொள்ளும் அரசாங்கம்!
நாட்டில் தற்போது பருப்பு, சீனி, அரிசி, பால்மா ஆகியனவற்றை விட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
அனைத்து மரக்கறிகளும் கிலோவொன்று 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகப் கொழும்பு பொருளாதார மத்திய நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரிய வெங்காயம் கிலோவொன்று 120 ரூபா வரையில் உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தையில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தாம் கவலை அடைவதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரன(Ramesh Pathirane) தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இறக்குமதி செய்யப்படும் வர்த்தக பொருட்கள் மற்றும் சில மருந்து வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதுடன், இலங்கையில் பயன்படுத்தும் எரிபொருள், பால்மா உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனவே, வெளிநாடுகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகை அதிகரித்துள்ளது. தற்போது இலங்கை மாத்திரமின்றி அபிவிருத்தி அடைந்த நாடுகளிலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் சில மாதங்களில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.