சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்தில் போராட்டம்
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து எழுச்சிப் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த P2P மக்கள் எழுச்சி போராட்டத்தின் பின்னர் மீண்டும் வடகிழக்கு தாயக மக்கள் தங்களின் சுதந்திர தாகத்தை இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தும் போராட்டமாக இந்த போராட்டம் அமையும் எனக் கூறப்படுகிறது.
எழுச்சிப் போராட்டம்
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில், பெருமளவான மக்கள் திரண்டு வந்து ஆதரவு வழங்குவார்கள் என்று நம்பப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கும் இப்போராட்டமானது கிழக்கில் மட்டக்களப்பு வரை எடுக்கும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு
இப்போராட்டத்திற்கு தமிழர் தாயகத்தில் இருக்கும் மாணவர் சமூகங்கள், சிவில் சமூக அமைப்புகள், மதப் பெரியார்கள், தமிழ் தேசியக் கட்சிகள், ஊடகவியலாளர்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் என அனைவரும் பங்குபற்றி தங்களது ஆதரவை வெளிக்காட்ட வேண்டும்.
இந்தப் போராட்டத்தை மாபெரும் மக்கள் எழுச்சி கொண்ட ஜனநாயக எழுச்சி போராட்டமாக மாற்ற வேண்டும்.
இதற்காக வடகிழக்கு உள்ள அனைவரும் இணைந்து தமிழர்களின் சுதந்திரத்திற்காக மீண்டும் ஒன்று படுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
