பொருளாதார பாதிப்பின் மத்தியில் தீவிரமாக தலைதூக்கியுள்ள தீவிரவாதம் - பாரபட்சமின்றி நடவடிக்கை!
உலக நாடுகளுக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதுடன், தீவிரவாதத்தை உலக நாடுகள் எதிர்க்கும் என இந்தியா நம்பும் அதேவேளை, இதனை ஆதரிப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், காணொளி மூலமாக உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“கொவிட் தொற்றினால் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்ட உலக நாடுகளுக்கு தற்போது தீவிரவாதமும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
நெருக்கடிக்குள் உலக நாடுகள்
கொரோனா தொற்றால் மூன்று வருடங்களாக எரிபொருள், உரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் கடன்கள் போன்றவற்றினால் உலக நாடுகள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளன.
இவ்வாறான நிலையில் குறித்த நாடுகளில் தீவிரவாதமும் அதிகரித்துள்ளதாகவும், அதனை ஆதரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
