கடற்தொழில் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடிய இந்திய வெளிவிவகார அமைச்சர்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடற்தொழில் துறைமுகங்களை அமைத்துத் தருவதற்கு இந்தியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கு இந்தியாவினால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இரண்டு நாடுகளினதும் அமைச்சர்கள் இவ் சந்திப்பின் போது விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டத்தைமீறி எல்லை கடந்து இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடுவதை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டது.
இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் கச்சதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு தொடர்பாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் இடம்பெற்ற அதிகாரிகள் மட்டக் கலந்துரையாடலும் பயனுள்ளதாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்துடன், வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் சில வேண்டுகோள்களை இந்திய வெளியுறவு அமைச்சரிடம் முன்வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை அபிவிருத்தி தொடர்பான கோரிக்கைகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




