இலங்கை தொடர்பில் இந்தியா அளித்த உறுதிமொழி
கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்(S. Jaishankar) தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் (Prof. GL Peiris) தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார். இலங்கைக்கான கடனுதவியை நீடிப்பது தொடர்பாக மேலும் ஆலோசித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
'அண்டை நாடுகளின் முன்னுரிமை' கொள்கையின் கீழ் இலங்கையை முக்கியமான பங்காளியாக இந்தியா ஆதரிக்கும் என புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
Greeted FM G.L. Peiris of Sri Lanka in the New Year. A reliable friend, India will support Sri Lanka in these difficult times. Agreed to remain in close touch.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 6, 2022