இந்தியாவுக்கு விழுந்த பேரிடி - பாகிஸ்தான் பக்கம் சாயும் ரஷ்யா..!
பாகிஸ்தானுடன் தனது உறவுகளை ஆழப்படுத்த விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் முகமாக இந்தியா உக்ரைனுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை ரஷ்யாவுடன் நீண்ட நெடிய ஒரு உறவைக் கொண்டிருந்தது. மேற்குலக நாடுகள் இந்தியாவுடன் சுமுக உறவுக்கு வரும் முன்பு இருந்தே ரஷ்யா இந்தியாவுக்கு தொடர்ச்சியாகப் பல உதவிகளைச் செய்துள்ளது.
சர்வதேச அமைப்புகளில் பல நேரங்களில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா வாக்களித்துள்ளது. இப்போதும் கூட இந்திய ராணுவத்திடம் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கியது தான்.
ரஷ்யா - உக்ரைன் போர்
இவ்வாறிருக்க ரஷ்யா - உக்ரைன் போர் சமயத்தில் இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. இந்தச் சூழலில் தான் இப்போது சர்வதேச அரசியல் மெல்ல மாற ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவுடன் இந்தியா அதீத நெருக்கம் காட்டும் நிலையில், ரஷ்யா இப்போது பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தொடங்கியுள்ளது. ஆயுதம் மற்றும் கச்சா எண்ணெய்யை வழங்குகின்றது. இதற்குப் பதிலடி தரும் வகையில், உக்ரைன் பக்கம் இந்தியச் செல்ல தொடங்கியுள்ளது.
இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுடன் தனது உறவை அதிகரிக்க விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், மறுபுறம் இந்திய நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் உயர்மட்ட உதவியாளர் ஆண்ட்ரி யெர்மக் உடன் தொலைப்பேசி வழியாகப் பேசியுள்ளமை ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த மாதம் ஜப்பான் ஹிரோஷிமாவில் ஜி7 மாநாடு நடந்த நிலையில், அப்போது இந்தியப் பிரதமர் மோடியிடம் தனது சமாதான திட்டத்தை ஜெலென்ஸ்கி விளக்கினார்.
அதைக் கேட்ட பிரதமர் மோடி, உக்ரைன் மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வேன் எனக் கூறியிருந்தார்.
பாதிக்கப்படும் உலக பொருளாதாரம்
உக்ரைன் போர் ஓராண்டிற்கு மேலாகத் தொடரும் நிலையில், உலக பொருளாதாரமே பாதிக்கப்படுவதால் எப்படியாவது உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றே அனைத்து உலக நாடுகளும் விரும்புகிறது.
இந்தப் போரால் கச்சா எண்ணெய் தொடங்கி, சூரிய காந்தி எண்ணெய் விலை வரை பல விஷயங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய அதிபர் புடினுக்கு இடையே அமைதி மாநாட்டை நடத்த டென்மார்க் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த முயற்சிக்குச் சீனா, பிரேசில் மற்றும் இந்தியாவிடம் ஆதரவு கோரியது. இருப்பினும், ரஷ்யா தொடக்கம் முதலே உக்ரைனின் இந்த சமாதான திட்டத்தை நிராகரித்தே வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பாகிஸ்தான் உடன் உறவுகளை ஆழப்படுத்த விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை இந்தியாவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாக அமைந்துள்ளது.
ரஷ்யா பாகிஸ்தானுடன் நெருக்கம்
ரஷ்யா திடீரென பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டவும் காரணம் இருக்கவே செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். அங்கே அதிபர் பைடனையும் சந்திக்க உள்ளார்.
இப்போது அமெரிக்காவுடன் இந்தியா அதிகம் நெருக்கம் காட்டும் நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார்.
பாகிஸ்தான் உடன் தூதரக ரீதியாக உறவை ஏற்படுத்தி 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிப்பிட்டு நடந்த நிகழ்வில் பேசிய அவர், "பாதுகாப்பு சவால்கள் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதம் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடும் கூட்டு முயற்சிகளில் பாகிஸ்தானை முக்கிய சர்வதேச கூட்டு நாடாக ரஷ்யா கருதுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக இந்தியாவில் பயங்கரவாதிகள் தொடர்ந்து ஊடுருவி வருகின்றனர். எல்லை கடந்த பயங்கரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக இந்தியா தொடர்ந்து கூறி வரும் நிலையில், ரஷ்யா அதற்கு நேர்மாறாக கூறியுள்ளது இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் நாணயத்திலேயே வணிகம்
இது மட்டுமின்றி பாகிஸ்தானுக்குப் பல உதவிகளையும் செய்ய ரஷ்யா ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அவர்களுக்குச் சலுகை விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளன.
இதுவரை இந்தியாவுக்கு மட்டுமே சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷ்யா கொடுத்து வந்த நிலையில், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல டொலரை தவிர்த்துவிட்டு ரஷ்யாவின் நாணயத்திலேயே வணிகம் செய்யவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
ரஷ்யா நீண்ட காலமாக இந்தியாவின் மிகப் பெரிய ராணுவ விநியோகத்தராக இருந்து வருகிறது. இத்தனை ஆண்டுகளை இந்தியாவுடன் நெருக்கம் காட்டிய ரஷ்யா, பாகிஸ்தான் உடன் ஆழமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
இப்போது புவிசார் அரசியல் மாற ஆரம்பித்துள்ளது. குறிப்பாக 2008இல் இந்தியா-அமெரிக்க இடையே கையெழுத்தான சிவில் அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு இரு நாடுகளும் நெருங்கி வருகிறது.
பாகிஸ்தானுக்கு செய்த உதவிகள்
இதன் காரணமாகவே பாகிஸ்தானுக்கு பல உதவிகளைச் செய்ய ரஷ்யா ஆரம்பித்துள்ளது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவின் மிக் 35 அட்டாக் ஹெலிகாப்டர்கள் பாகிஸ்தானுக்கு விற்றது ரஷ்யா.
அதேபோல 2015இல் பாகிஸ்தானுடன் ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2016இல் அமெரிக்காவுடன் லாஜிஸ்டிக்ஸ் எக்ஸ்சேஞ்ச் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட சில வாரங்களிலேயே பாகிஸ்தான் உடன் ரஷ்யா கூட்டுப் போர்ப் பயிற்சியைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பல காலமாகவே அமெரிக்கா, ரஷ்யா என இரண்டு நாடுகளுடன் இணக்கமான உறவையே வைத்துள்ளது. இதனால் தான் உக்ரைன் போரில் கூட இந்திய நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருந்தது.
இந்தச் சூழலில் தான் இப்போது பாகிஸ்தானுடன் ரஷ்யா நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ள நிலையில், இந்தியாவும் தனது நிலைப்பாட்டை மாற்ற ஆரம்பித்துள்ளமை உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது.