கடற்றொழிலாளர் விடயத்தில் தமிழக அரசு அசமந்தப் போக்கு : வடமாகாண கடற்றொழிலாளர்கள் சுட்டிக்காட்டு
இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் வருவதை தடுக்க அரசுக்கும், கடற்படைக்கும் அழுத்தத்தை கொடுத்தும் அவர்களின் அத்துமீறிய வருகையை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்றைய தினம் (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் பேசி வருகிறோம்.
அத்து மீறிய நடவடிக்கை
நேற்றைய தினம் 4 படகுகளில் 35 இந்திய கடற்றொழிலாளர்கள் மன்னார் தெற்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கின்ற கோரிக்கைகளை உதாசீனம் செய்கின்ற வகையில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய நடவடிக்கையும் அதனால் கைதுகளும் இடம்பெறுகின்றன.
இதேவேளை குறித்த கடற்றொழிலாளர்கள் மன்னார் தெற்கு கடற்பகுதியில் தொழிலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தியை இந்திய ஊடகங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.
சட்டவிரோத கடற்றொழில்
கடந்த காலங்களில் அவர்கள் ஏற்றுக்கொண்ட வரலாறு இல்லை. தற்போது அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் மன்னார் கடற்பரப்பினுள் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழில் முறைமையையும், இவ்வாறு உள்நுழைகின்றமையையும் இவர்கள் நிறுத்திக் கொள்வதற்கு நாங்கள் எத்தனையோ நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
அரசிற்கு அழுத்தத்தை கொடுக்கின்றோம். கடற்படைக்கும் அழுத்தத்தை கொடுக்கின்றோம். எனினும் அவர்களின் அத்து மீறிய வருகையை நிறுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். இவ்விடயத்தில் தமிழக அரசு அசமந்த போக்குடன் செயற்படுகின்றது.“ என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |