இலங்கையில் தங்கியிருந்த இந்திய பிரஜைகளான சகோதரர்கள் கைது
தமிழ்நாடு(tamil nadu) மதுரையைச் சேர்ந்த அக்கா, தம்பி என சகோதரர்களை கைது செய்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து சட்டவிரோதமாக தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக தங்கியிருந்து புடைவை வியாபாரம்
காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து ஏறாவூர் தளவாய் பகுதில் உள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு எந்தவிதமான ஆள் அடையாள ஆவணங்களும் இன்றி இவர்கள் இருவரும் சட்டவிரோதமாக தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழ்நாடு மதுரையைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணும் அவரின் சகோதரரான 51 வயதுடைய ஆணுமே கைது செய்யப்பட்டவர்களாவர்.
சுற்றுலா விசா
கடந்த ஜுன் மாதம் இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து இந்த பகுதியில் தங்கியிருந்து புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |