போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தல்களின் நிலையமாக இந்து சமுத்திர வலயம் - கோட்டாபய ராஜபக்ச
இந்து சமுத்திர வலயமானது, மனிதக் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் நிலையமாகக் காணப்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று மாலை ஆரம்பமான இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் வர்த்தகமானது பிராந்திய நாடுகளுக்குப் பிரச்சினையாக மாறியுள்ளது.
புலனாய்வுப் பிரிவுகள், கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாகவே இதனை வெற்றிகரமாக முறியடிக்க முடியும்.
பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும், அதற்கு சகல நாடுகளின் ஒருங்கிணைப்பே தேவைப்படுகின்றது.
இது தொடர்பில் மிகக் கவனமாகக் கண்காணித்து அதனை ஒழிக்காவிட்டால் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பன இலகுவில் இன்னுமோர் இனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.