நாளை இலங்கை வரும் மோடி - இந்தியாவில் இருந்து களமிறக்கப்பட்ட அணி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நாளை 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க இந்தியாவில் இருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இந்தியப் பிரதமரின் வருகையின் போது கொழும்பு (Colombo) மற்றும் அனுராதபுரத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம்
இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய காவல்துறையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 4 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி ஆகியவை அவ்வப்போது மூடப்படும் என சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
“இந்த காலகட்டத்தில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மக்கள், இந்த வீதிகள் மூடப்படுவதைக் கருத்தில் கொண்டு தங்கள் பயண ஏற்பாடுகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
“ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பு – காலி முகத்திடல் பகுதிஇ சுதந்திர சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதி மற்றும் பத்தரமுல்லையில் உள்ள அபே கம வளாகத்திற்கு அருகில் உள்ள வீதிகள் அவ்வப்போது மூடப்பட வேண்டியிருக்கும் எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம்
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தனது சமூக வலைத்தளக் கணக்காக எக்ஸ் (X) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
My visit to Sri Lanka will take place from the 4th till the 6th. This visit comes after the successful visit of President Anura Kumara Dissanayake to India. We will review the multifaceted India-Sri Lanka friendship and discuss newer avenues of cooperation. I look forward to the…
— Narendra Modi (@narendramodi) April 3, 2025
அந்த பதிவில், “எனது இலங்கை விஜயம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பயணம் வெற்றியடைந்ததன் தொடர்ச்சியாக என்னுடைய இந்த பயணம் அமைகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பன்முக தன்மை கொண்ட நட்புறவை பற்றி நாங்கள் மறுஆய்வு செய்து, ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ள காத்திருக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
