இலங்கை வருகிறது இந்திய கப்பல் - வெளியான காரணம்..!
இந்தியாவின் Cordelia Cruise சொகுசு பயணிகள் கப்பல் தனது முதல் சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் வகையில் எதிர்வரும் 5 ஆம் திகதி சிறிலங்காவிற்கு வருவதற்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொர்டேலியா குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து 5ம் திகதி புறப்படும் என்றும், 7ம் திகதி கப்பலை சிறிலங்காவில் வரவேற்பதற்கான வைபவம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில், இந்த வைபவத்தில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளன.
சென்னையில் இருந்து பயணம்
தற்போது வரை இந்திய உள்நாட்டு பயணக் குழுவாக செயற்பட்டு வரும் நிலையில், இலங்கைக்கான பயணங்களின் தொடக்கத்துடன் அதிகரித்து வரும் தேவையை கருத்திற் கொண்டு மேலும் கப்பல்களை அனுப்புவதற்கு நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சென்னையில் இருந்து வரும் கப்பல், ஜூன் மாதம் முதல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் துறைமுகங்களுக்கு பயணிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
