உலக நாடுகளை மிரட்டும் சக்தியாக உருவெடுத்துள்ள இந்திய உளவுத்துறை!
மேற்குலக நாடுகளை இந்திய உளவுத்துறையான ரோ மிரட்ட தொடங்கியுள்ளது, மேற்குலக நாடுகளுக்குச் சென்று அங்கு இரகசிய திட்டங்களை செயற்படுத்துவதன் வாயிலாக மேற்குலக நாடுகளை இந்திய உளவுத்துறை மிரள வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இடம்பெற்ற இரண்டு சம்பவங்களுக்குப் பின்னர் உலகின் முன்னணி உளவுத்துறைகளான அமெரிக்காவின் சிஐஏ, இஸ்ரேலின் மொஸாட் என்பவற்றுக்கு போட்டியாக தனது தடத்தினை ஆழமாக இந்தியாவின் ரோ பதித்துள்ளது.
இந்திய உளவுத்துறை
கடந்த ஜூலை மாதம் கனடாவில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருப்பதாக கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக தெரிவித்திருந்தார், இதனால் இரு நாடுகளுக்கிடையில் பெரும் விரிசலும் ஏற்பட்டிருந்தது.
அதே நிலை தற்போது அமெரிக்காவிற்கும் ஏற்பட்டுள்ளது, அண்மையில் அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்வதற்கான திட்டத்தை இந்திய அரசு தீட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக எச்சரித்தார்.
நியூயோர்க்கில் இயங்கிவரும் நீதிக்கான சீக்கியர்களின் குழுவின் தலைவரான வழக்கறிஞர் குர்பத்வந்த் சிங் பன்னுனை குறிவைத்த சதித்திட்டத்தினை அமெரிக்கா முறியடித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்களும் அண்மையில் தெரிவித்திருந்தன.
அச்சுறுத்தும் சக்தியாக
அமெரிக்காவின் சிஐஏ, இஸ்ரேலின் மொஸாட் ஆகிய பெயர் பெற்ற உளவுத்துறையினர் சொந்த நாடுகளைத் தாண்டி வெளிநாடுகளுக்குச் சென்று தமது இரகசியத் திட்டங்களை முன்னெடுத்து வந்ததனால் தமக்கென்ற தனி இடத்தினைப் பெற்றிருந்தன.
இந்தியாவும், இந்தியாவிற்கு வெளியே ஆசியாவின் பல நாடுகளில் தமது இரகசிய செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தன, ஆனால் இந்தியாவின் ரோ பற்றி வெகுவாக பேசப்படவில்லை.
ஆனால் அண்மைய நாட்களில், அமெரிக்கா மற்றும் கனடா விவகாரங்களின் பின்னர் உலக நாடுகளை அச்சுறுத்தும் சக்தியாக இந்திய உளவுத்துறை மாறியுள்ளமையினால் Five Eyes intelligence என்ற அமைப்பு இந்தியாவிற்கு எதிரான விசாரணையை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.