தரமற்ற மருந்துகள் இறக்குமதி -தவறை ஒப்புக் கொண்டது இலங்கை அரசு
இலங்கைக்கு தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதை தாம் ஒப்புக்கொள்வதாக மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி.ஜயரத்ன இன்று (30) தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையினால் நாட்டில் இடம்பெற்ற செயலமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மருந்துகள் நீக்கம்

இலங்கை மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் மருந்தாளுநர்களுக்கான மூன்று நாள் பயிற்சிப் பட்டறை இன்று (30) அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் அதிகாரிகளின் பங்களிப்புடன் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த மருந்துகள் ஒழுங்குமுறை அதிகார சபையின் பேராசிரியர் எஸ்.டி.ஜயரத்ன,
"அந்த ஒவ்வொரு மரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த மருந்துகளை உபயோகத்தில் இருந்து நீக்கிவிட்டோம். தடுப்பூசி ஒவ்வாமையால் ஒரு நோயாளி இறந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அதைச் சரிபார்க்க அவுஸ்திரேலியாவின் டிஜி இன்ஸ்டிடியூட்டுக்கு மருந்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, நான் மூன்று அல்லது நான்கு மருந்தை நீக்கிவிட்டேன்”.
தரமற்ற மருந்துகள்

கேள்வி - மருந்தை அகற்றினாலும் மீண்டும் வரலாம் என்ற குற்றச்சாட்டு உள்ளது?
மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் - "அப்படி வர முடியாது. அந்த நிறுவனம் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
கேள்வி - இலங்கைக்கு தரக்குறைவான மருந்துப் பொருட்கள் வந்துள்ளதை ஏற்றுக்கொள்கிறீர்களா
மருந்து ஒழுங்குமுறை ஆணைய தலைவர் – “சில தரம் குறைந்த மருந்துகள் வந்துள்ளன. உதாரணமாக, கண்களுக்கு கொண்டு வரப்படும் மருந்து தரக்குறைவானது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதை முழுமையாக அகற்றிவிட்டோம். மருந்துகளில் பல வகைகள் உள்ளன. குப்பியை எங்களால் சோதனை செய்ய முடியாது."என்றார்.