பால், இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க புதிய வகை கால்நடைகள் அறிமுகம்!
நாட்டில் பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்காக அதற்கு ஏற்ற இரண்டு வகை மாடுகள் மற்றும் ஆடுகளை அறிமுகப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகளை ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அண்மையில் பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
இலங்கையில் கால்நடை உற்பத்தி குறைவதற்கான முக்கிய காரணம் அந்தந்த பொருட்களுக்கு பொருத்தமான விலங்குகள் இல்லாமையே என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தட்பவெப்பம்
அதன் காரணமாக தேவையான இறைச்சி மற்றும் பால் என்பவற்றை பெருமளவில் இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை குறைப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிகின்றன என்றும் அவர் கூறினார்.
பால் மற்றும் இறைச்சி உற்பத்தியினை அதிகரிப்பதற்காக பசுக்கள் மற்றும் ஆடுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாலும், அந்த விலங்குகள் இலங்கையின் தட்பவெப்ப நிலையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
இதுகுறித்து விளக்கமளித்த போது, தினசரி தேவைப்படும் மாட்டிறைச்சியின் அளவு 37,000 மெட்ரிக் தொன் ஆகவுள்ளது, இதில் பெரும்பாலான இறைச்சி இறக்குமதி செய்யப்படுகிறது.
அதிக பால் உற்பத்தி
மேலும் பாலின் தேவையில் 40 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது, மிகுதி 60 சதவீதமும் இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய கால்நடை இனங்களோ அதற்கான முறையான தொழில்நுட்பமோ நாட்டில் இல்லாததன் காரணமாக விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக குற்றம் சாட்டுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் இதற்கு பதிலளித்த போது, இதுபோன்ற ஆய்வுகளை நிகழ்த்த குறைந்தது 5-7 ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறியிருந்தனர்.
அந்தவகையில் தற்போது கிழக்கு மாகாணத்தில் வெள்ளை மாடுகளைப் பயன்படுத்தி புதிய வகை கால்நடைகளை அடையாளம் காணும் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், கொட்டுகச்சிய பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் கொட்டுகச்சி ஆடு இனங்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த திட்டத்தைத் தொடங்கியிருந்தால், நாட்டுக்கு ஏற்ற கால்நடைகள் மற்றும் ஆடு இனங்களை இப்போது உற்பத்தி செய்திருக்க முடியும் ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் நாட்டுக்கு தேவையான அளவு பால் மற்றும் இறைச்சியை இன்றுவரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.