இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டண முறைமையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் தற்போதுள்ள மின்னணு சுங்க அறவீடு (ETC) முறைக்கு பதிலாக இணையாக பலவழி தடையற்ற போக்குவரத்து (Multi-Lane Free Flow) முறையை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) தற்போதைய பணிப்பாளர் அனுராத ஹெட்டியாராச்சி ஊடக சந்திப்பொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பணப் பரிவர்த்தனையைக் குறைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ''சுங்கச்சாவடி செயல்பாடுகளை நவீனமயமாக்கவும் செயல்திறனை மேம்படுத்தவும் அதிகார சபை எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் இது ஒரு பகுதியாகும்.

ஏப்ரல் 10 முதல் 22 வரை, புத்தாண்டு பண்டிகைக் காலத்தில், 14 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணித்த காரணத்தினால் நாங்கள் ரூ. 536 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளோம்.
இதற்கமைய, குருநாகல் - பொத்துஹெரவிலிருந்து ரம்புகனா வரையிலான வீதிகளில் மார்ச் 2027-க்குள் MLFF முறை திறக்கப்படும் மற்றும் கம்பஹா - கடவத்தையிலிருந்து மிரிகம வரையிலான வீதிகளில் 2028-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) முறையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறக்கவுள்ளோம்.
அட்டை மூலம் பணம் செலுத்துதல் போன்ற பணமில்லாப் பரிவர்த்தனைகளை விரைவுச்சாலைகளில் அறிமுகப்படுத்த நாங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, மற்ற நாடுகளில் காணப்படும் அமைப்புக்கு இணையான பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) முறையையும் அறிமுகப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
மேலும், பலவழி தடையற்ற போக்குவரத்து (MLFF) முறையின் கீழ், வாகனப் பதிவு எண்கள் அடையாளம் காணப்படும் மற்றும் கட்டணங்கள் மின்னணு முறையில் கழிக்கப்பட்டு, இந்தத் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன" என அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |