தங்காலை போதைப்பொருள் பின்னணியில் எதிர்க்கட்சி அரசியல்வாதியின் சகோதரர்!
தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவு போதைப்பொருள் தொகையை தரையிறக்க எதிர்க்கட்சி அரசியல்வாதியொருவரின் சகோதரர் ஒருவருக்கு சொந்தமான ஹோட்டலில் பணி புரியும் நபரொருவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சீனிமோதர வீட்டில் உயிரிழந்திருந்த இரண்டு பேர்களுள் அந்த ஊழியரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.
எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரின் சகோதரரான ஹோட்டலின் உரிமையாளருக்கும் சீனிமோதர வீட்டிற்கும் தொடர்புகள் உள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழுவின் தொடர்பு
1000 மில்லியன் பெறுமதியுடைய குறித்த போதைப்பொருட்களை உனகுருவே சாந்த எனப்படும் பாதாள உலகக் குழு தலைவர் மூலம் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு அனுப்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீனிமோதர காணியுடன் உனகுருவே சாந்தவுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில் காணியுடன் பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கும், எதிர்க்கட்சி அரசியல்வாதியின் சகோதரருக்கும் உனகுருவே சாந்தவுக்கும் தொடர்புகள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக பல நாள் கப்பலில் கொண்டு வரப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டவை
ஈரானிய மற்றும் பாகிஸ்தானிய பிரஜைகள் குழு ஒன்று பாகிஸ்தானில் இருந்து பல நாள் கப்பலில் தெற்கு கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் எல்லைக்கு இந்த போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.
பல நாள் மீன்பிடிக் கப்பல் இந்த நாட்டின் கடற்கரையை அடைந்த பிறகு, இரண்டு சிறிய மீன்பிடிக் கப்பல்கள் பல நாள் மீன்பிடிக் கப்பலுக்கு அருகில் சென்று அதிலிருந்து போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொண்டு தங்காலை கடற்கரையை வந்தடைந்துள்ளன.
போதைப்பொருட்களை கரைக்கு கொண்டு வரும்போது படகுகளில் ஒன்று கவிழ்ந்ததாகவும் புலனாய்வாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. படகில் இருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் கடலில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் விநியோகம்
இரண்டு படகுகளும் கரையை அடைந்தவுடன், கரைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லொரியில் போதைப்பொருட்கள் ஏற்றப்பட்டு சீனிமோதர வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நாட்டின் பல இடங்களில் விநியோகிப்பதற்காக குறித்த லொரிகளில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
