தாய்லாந்து எண்ணெய் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணையில் அனுமதி
தாய்லாந்து எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பாகப் பயணிப்பதற்கு ஈரான் அரசாங்கத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் அநுட்டின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயையே தாய்லாந்து பெரிதும் நம்பியுள்ள நிலையில், ஈரானுடன் எட்டப்பட்டுள்ள இந்த உடன்படிக்கையானது தாய்லாந்தின் எரிசக்தி விநியோகம் தொடர்பான கவலைகளைத் தணிக்கும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளதால், மார்ச் மாத தொடக்கத்தில் காணப்பட்டதைப் போன்ற இடையூறுகள் மீண்டும் ஏற்படாது என்ற அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தாய்லாந்து சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
அத்துடன் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்தின்படி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) 80வீதத்துக்கும் அதிகமானவை ஆசியாவிற்குச் செல்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பகுதி எரிபொருள் விநியோகப் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தாய்லாந்தில் உள்ள எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் அடிக்கடி காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த மாத தொடக்கத்தில், ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த தாய்லாந்து கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று இனந்தெரியாத ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
இச்சம்பவத்தின் போது கப்பலில் இருந்த ஊழியர்கள் ஓமான் கடற்படையினரால் மீட்கப்பட்ட போதிலும், மூன்று ஊழியர்கள் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |