ஈரானில் அரங்கேறும் கொடூரம் - கடும் குளிரில் ஆடைகளற்ற நிலையில் சித்ரவதை
ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு கடும் குளிரில் அவர்களை ஆடைகளற்ற நிலையில் சித்ரவதை செய்வதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
‛முல்லா கண்டிப்பாக போ' என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேவேளையில் போராட்டத்தை கட்டுப்படுத்த ஈரான் தொடர்ந்து முயன்று வருகிறது.
சிறையில் துன்புறுத்தல்
தற்போது வரை 26 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள், பாதுகாவலர்கள் என்று மொத்தம் 5,000 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் கூட போராட்டம் மட்டும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் தான் கைது செய்யப்படுவோருக்கு சிறையில் துன்புறுத்தல் கொடுக்கப்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அரசுக்கு எதிராக போராட்டம்
அதாவது சிறையில் இருப்போரை நிர்வாணப்படுத்தப்பட்டு கடும் குளிரில் சித்ரவதை செய்யப்படுகின்றனர். அதேபோல் சிலரின் உடலில் ஊசிகள் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

அந்த ஊசி எத்தகையது? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக பிரிட்டனை சேர்ந்த டெய்லி எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், ‛‛ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு வருவோர் சிறையில் சித்ரவதை செய்யப்படுகின்றனர்.
கைதிகள் ஆடைகளை களைந்து உறைபனி போன்ற குளிர் சூழலில் துன்புறுத்தப்படுகின்றனர்.
நிர்வாணப்படுத்தப்படும் கைதிகளின் மீது சிறை அதிகாரிகள் குழாய் மூலமாக குளிர்ந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர். பல கைதிகளுக்கு திடீரென ஊசிகள் செலுத்தப்படுகிறது'' என கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |