ஈரான் - இலங்கைக்கிடையிலான உறவில் திருப்புமுனை
ஈரான் மற்றும் இலங்கைக்கிடையிலான கூட்டு பொருளாதார ஒத்துழைப்பு ஆணைக்குழு மீண்டும் செயற்படுத்தப்பட வேண்டுமென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வலியுறுத்தியுள்ளார்.
ஏகாதிபத்திய மற்றும் சுயநல வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பில் இலங்கை அவதானமாக செயற்பட வேண்டும் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்று(6) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் நடைமுறையில் ஈரான் பாரிய அபிவிருத்தியை அடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இது தொடர்பான விடயங்களை இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள ஈரான் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசியாவின் நுழைவாயிலாக இலங்கை

இரு தரப்பினருக்கிடையிலான கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கும் ஆசியாவின் நுழைவாயிலாக இலங்கை அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனடிப்படையில் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள ஈரானிய நிறுவனங்கள் முன்வர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, அலி சப்ரியின் ஈரானுக்கான விஜயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் திருப்புமுனையாக அமைந்துள்ளதென அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் ஓமர் அப்துல்லாஹ்யன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.