அமெரிக்காவுக்கு ஈரானின் இராணுவ தலைமையகம் விடுத்த பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகை மற்றும் கடல்சார் கொள்ளை நடவடிக்கைகள், ஈரானிய ஆயுதப் படைகளின் கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும் என ஈரானின் காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் கடல்சார் அத்துமீறல்கள் தொடருமானால், ஈரானின் பலம் வாய்ந்த ஆயுதப் படைகள் அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானிய ஆயுதப் படைகள்
நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கு ஈரானிய ஆயுதப் படைகள் முன்னெப்போதையும் விட அதிக வலிமையுடனும் தயார் நிலையுடனும் இருப்பதை அமெரிக்கா உணர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரானியப் படைகள் பிராந்தியத்தில் உள்ள எதிரிகளின் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அந்தத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதல் திறன்
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தரப்பிலிருந்து மீண்டும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், அவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மூன்றாவது திணிக்கப்பட்ட போரின் போது ஈரானின் தாக்குதல் திறனை அமெரிக்க இராணுவம் ஏற்கனவே அனுபவித்துள்ளதாக அந்த அறிக்கை நினைவுபடுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்